Puthiya Tholilnutpam |
பெங்களூரில் பல்வேறு துறைகளில் சுமார் 21 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. முதல் காலாண்டில் மொத்தம் 18,700 புதிய வேலை வாய்ப்புகள் உருவானது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுமைக்கும் 1.36 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் இரண்டாம் காலாண்டில் கிடைத்துள்ளன. முந்தைய காலாண்டில் இது 1.25 லட்சமாக இருந்தது.
சென்னை, பெங்களூர், டெல்லி, கோல்கத்தா, மும்பை ஆகிய பெருநகரங்களில் மட்டும் 61 சதவீத வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன என்று அசோசேம் பொதுச் செயலர் டி.எஸ். ரவாத் தெரிவித்துள்ளார். 15 சதவீதத்துக்கு மேல் வேலை வாய்ப்பை அளித்துள்ள நகரங்களில் டெல்லிக்கு அடுத்தபடியாக பெங்களூர் நகரம் இடம்பெற்றுள்ளது. டெல்லியில் 24 சதவீத வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் மட்டும், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவை (ஐடிஇஎஸ்). ஹார்ட்வேர் ஆகியவற்றில் மட்டும் மொத்தம் 67 சதவீத வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த நகரத்தில் மொத்தம் 14 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன. முந்தைய காலாண்டில் இந்நகரில் 10,600 வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவானது. ஒப்பிட்டு பார்க்கையில் 30 சதவீதம் கூடுதலாக வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
மும்பையில் 14,649 புதிய வேலை வாய்ப்புகளும், சென்னையில் 8,786 புதிய வேலை வாய்ப்புகளும் கிடைத்துள்ளன. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் கோல்கத்தாவில் புதிய வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளன. மொத்தம் 6,400 புதிய வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. முந்தைய காலண்டில் 6,500 வேலை வாய்ப்புகள் கிடைத்தன.
புதிதாக உருவான வேலை வாய்ப்புகளில் 58 ஆயிரத்தில் ஐடி, ஐடிஇஎஸ், ஐடி ஹார்ட்வேர் ஆகியவற்றின் பங்களிப்பு 42 சதவீதத்துக்கும் மேலாகும்.