இலவச 4ஜி டேட்டா, அன் லிமிட்டட் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்ஸ் என பல சலுகைகளை அள்ளி தெளித்து கடந்த ஆண்டு ஜியோ நிறுவனம் கால் பதித்தது. அன்று முதல் இன்று வரை ஜியோவின் புரட்சி தொடர்ந்து வருகிறது. இந்த அதிரடி மூலமாக இதுவரை சுமார் 120 மில்லியன் வாடிக்கையாளார்களை தன்வசப்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஜியோ வாடிக்கையாளர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜியோ வாடிக்கையாளரின் பெயர், இ-மெயில் ஐ.டி, மொபைல் எண், சிம் கார்டு ஆக்டிவேட் ஆன தேதி, ஆதார் எண், வாடிக்கையாளரின் முகவரி உள்ளிட்ட பல தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இந்தியாவின் மிகப்பெரிய தரவு மீறல் ஆக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு ஜியோ நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளார்களின் தகவல்கள் பாதுகாப்பாக தான் வைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஆதாரமற்ற இந்த தகவல் தொடர்பாக சட்டத்துறையிடம் ஜியோ புகார் அளித்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.